×

அண்ணா பல்கலை புதிய துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த ஆர்.வேல்ராஜ் நியமனம்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வேல்ராஜை நியமித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பாவின் பதவிக்காலம், கடந்த ஏப்ரல் 11ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், சென்னை பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா ராணி சுங்கத் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நாடு முழுவதும் இருந்து 160 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் 5 பேர் மற்றும் சென்னை ஐஐடியின் பேராசிரியர்கள் இருவர் உள்ளிட்ட 10 பேரை நேர்முகத் தேர்வுக்குத் தகுதியானவர்களாக தேர்வு குழு இறுதி செய்தது. இவர்களுக்கான நேர்காணல் நேற்று முன் தினம் (9ம் தேதி) நடத்தப்பட்டது. இதில் இருந்து 3 பேர் கொண்ட பட்டியல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய துணைவேந்தராக அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான முனைவர் ஆர்.வேல்ராஜை நியமித்துத் தமிழக ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் முன்னணி பல்கலைக்கழகத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்தவரையே துணைவேந்தராக நியமிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்த நிலையில்,  தமிழகத்தைச் சேர்ந்த ஆர்.வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. இவர் பொறுப்பேற்றதில் இருந்து 3 ஆண்டுகளுக்குத் துணைவேந்தராக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது….

The post அண்ணா பல்கலை புதிய துணைவேந்தராக தமிழகத்தை சேர்ந்த ஆர்.வேல்ராஜ் நியமனம் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Vice ,Tamil ,Nadu ,R. Velraj ,Chennai ,Tamil Nadu ,Prohit ,Governor of ,Velraj ,Anna ,Dinakaran ,
× RELATED கல்லூரிகளில் வாக்குப்பதிவு...